உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள 'கப்ஜா' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் மற்றும் திரையுலகம் குறித்து பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நடிகை ஸ்ரேயா பகிர்ந்து கொள்கிறார்.
உபேந்திரா சாரோடு நடிப்பது உண்மையிலேயே பெருமையான விஷயம். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரியது. ஆனால் அவரைப் பாராட்டினால் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். நடனத்தின் மீதான ஆர்வம் எனக்கு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. நடனம் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நடனம் கற்றுக்கொண்டால் நடிப்பு எளிமையாகிவிடும்.
இந்தப் படத்தில் ஒரு அன்பான, ஸ்ட்ராங்கான ஒரு பெண்ணாக நான் நடித்திருக்கிறேன். மக்களால் அது நிச்சயம் ரசிக்கப்படும். சிறுவயதில் என் பள்ளிக்கு அருகில் இருந்த பார்வையற்றோருக்கான பள்ளியில் சேவைகள் செய்திருக்கிறேன். அப்போது அந்தக் குழந்தைகளின் அன்பு என்னை ஈர்த்தது. பிற்காலத்தில் நான் ஒரு ஸ்பா தொடங்கியபோது அதில் முழுக்க முழுக்க பார்வையற்றவர்களையே பணியில் அமர்த்தினேன். மற்றவர்களை விட அவர்களால் அதிகம் உணர முடியும் என்பதால் அவர்கள் மசாஜ் செய்வதில் சிறந்து விளங்கினர். அவர்களுடைய அன்பு தான் இன்றும் என்னை இயக்குகிறது.