இந்தியாவின் பழம்பெரும் பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் 1930-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில் பிறந்தவர். பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜஸ்ராஜ், பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத பாடகராக திகழ்ந்தவர். 2000-ஆம் ஆண்டு இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. கரோனா ஊரடங்குக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர், ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் இன்று அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாடகி ஷ்ரேயா கோஷல் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்.."ரசிகர்களை உயர்ந்த மனிதர்களுடன் இணைக்கும் தெய்வீக சக்தி அவருக்கு இருந்தது. இது ஒரு சகாப்தத்தின் முடிவு. சங்கீத் மார்டண்ட் பண்டிட் ஜஸ்ராஜ் ஜி இனி இல்லை. இந்த நாட்டின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரின் இழப்பை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். அவருடைய ஆசீர்வாதங்களை பெற்றிருப்பதை நினைக்கும்போது மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணரவைக்கிறது" என கூறியுள்ளார்.