காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது கன்னட நடிகர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கிச்சா சுதீப், "நம் காவிரி நம் உரிமை. இவ்வளவு ஒருமித்த கருத்துடன் வெற்றி பெற்ற அரசு காவிரியை நம்பும் மக்களை கைவிடாது என்று நம்புகிறேன். நிபுணர்கள் உடனடியாக ஒரு வியூகத்தை வகுத்து நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிலம்-நீர்-மொழிப் போராட்டத்தில் நானும் குரல் கொடுக்கிறேன்" என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார், அவரது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளின் முதுகெலும்பு நம் காவிரி . ஏற்கனவே மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இரு மாநில தலைவர்களும், நீதிமன்றமும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சுமுக தீர்வு காண வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை" என பேசியுள்ளார்.