நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த 16.04.2021 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மறைவு பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே மறைந்த நடிகர் விவேக்கிற்கு கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்டகால ஆசை இருந்துவந்தது. இதை அவர் பல மேடைகளில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். அது இதுநாள் வரை நிறைவேறாமலே இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க விவேக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. விவேக்கும் கமலுடன் முதல்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமலின் அரசியல் பிரவேசம், ஷங்கர் தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்கச் சென்றது எனப் பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் விவேக்கின் திடீர் மறைவால் அவரது நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இருந்தும் விவேக்கின் ஆசை நிறைவேற கமல் - ஷங்கர் இருவரும் மனது வைக்கும் பட்சத்தில் இதுவரை கமலுடன் விவேக் நடித்த காட்சிகளை 'இந்தியன் 2' படத்தில் பயன்படுத்தி விவேக்கின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு இருந்த சமயத்தில் அதற்கு இயக்குனர் ஷங்கர் தற்போது முட்டுக்கட்டை போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்கத் தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை அடுத்த வருடம் மே மாதம் இயக்கவுள்ளதால், வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை தான் ஃபிரீயாக இருக்கும் ஐந்து மாதங்களில் 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்க முயற்சி செய்வதாகக் கூறியுள்ளார். மேலும் நடிகர் விவேக் இறந்துவிட்டதால், அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கரின் இந்த திடீர் முடிவால் விவேக்கின் நீண்டநாள் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. மேலும் இது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.