
பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் அவர்கள் மீதும் மற்றும் அந்த மசாலா நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நுகர்வோர் உரிமை ஆர்வலர் யோகேந்திர சிங் புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகார் மனுவில், “பான் மசாலாவில், ஒவ்வொரு தானியத்திலும் குங்குமப்பூ உள்ளதாக விளம்பரம் செய்கின்றனர். ஒரு பாக்கெட்டுக்கு வெறும் 5 ரூபாய் விலை கொண்ட ஒரு பொருளில், ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் விலை கொண்ட குங்குமப்பூ எவ்வாறு உண்மையிலேயே இருக்க முடியும்? குட்காவில் குங்குமப்பூ இல்லை. இருப்பினும் பிரபல நடிகர்களால் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்படுகிறது. குட்காவை கவர்ச்சிகரமாகக் காட்டுவதன் மூலம், தீங்கு என அறியப்பட்ட பொருளை மறைமுகமாக உட்கொள்ளத் தூண்டுகின்றனர். இதனால் தவறான தகவலை விளம்பரம் செய்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையம் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் மசாலா நிறுவனத்துக்கும் நோட்டிஸ் அனுப்பி மார்ச் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.