நடிகர் விஜய், படங்களைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை மற்றும் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்த நாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இப்படி தீவிரமாகச் செயல்பட்டு வரும் விஜய், விரைவில் அரசியலில் நுழைவார் என அவரது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு இளைஞர். அவர் அரசியலுக்கு வந்த பின்பு அவரது செயல்பாடுகள் குறித்து தான் கருத்து சொல்ல முடியும்.
விஜய் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நிறைய படங்களில் நடித்துள்ளார். ஆனால் இத்தனை படங்களுக்கு பிறகு தான் அரசியலில் வர நினைக்கிறார். ஆனால் நடிகர் விஷால் 4, 5 படங்களில் நடித்துவிட்டு, நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்கிறார். கட்சி ஆர்வம் எங்க போச்சுன்னே தெரியவில்லை. கமல்ஹாசன் கூட மக்கள் நீதி மய்யம் என்று கட்சி தொடங்கினார். பிறகு மய்யமும் காணும் நீதியும் காணும். எங்க போச்சுன்னு தெரியவில்லை. இப்போது கூட்டணியில் தான் இருக்கிறார்" என்றார்.