தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி, நடிகர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி, பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு தற்போது ‘நடிப்புச் சித்தர்’ என்ற பட்டத்தை சீனு ராமசாமி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இறைவனுக்கு சித்தர்கள்போல நடிப்புத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த நடிப்புச் சித்தர் என்று அண்ணன் எம்.எஸ்.பாஸ்கரை கூறினால் அது மிகையாகாது. அவரது திறமை கண்டு அன்று தர்மதுரை படத்திலும், இன்று நான் இயக்கிய இடிமுழக்கம் படத்திலும் உணர்ந்து வியந்தேன். நினைத்த கணத்தில் கண்ணீர், கோபம், அன்பு, பாசாங்கு, கருணை, தயை, கழிவிரக்கம் போன்ற திறன்களை நொடிப்பொழுதில் நேர்த்தியாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர் இவர். இளைய தலைமுறையினர் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நல்ல முன்மாதிரி. மெத்தட் ஆக்டிங் மற்றும் இயல்பின் நடிப்பு இரண்டையும் வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகர். அதுமட்டுமல்ல முழு காட்சி முடியும்வரை, ஏன் நாள் முழுக்க கேமரா இவர் பார்வை படும் தூரத்தில் இருப்பார். "பாஸ்கர் அண்ணன கூப்புடுங்க" என்பேன். "தம்பி நான் ரெடி என்பார்". அரை மணி நேரத்திற்கு முன்பே களத்திற்கு, அன்று வழங்கப்பட்ட உடையுடன் நிற்பார். மேக்கப் இல்லண்ணே என்பேன். கன்னத்தில் விரல் அழுத்தி "இல்லை தம்பி" என்பார். நடிகர் திலகத்தை தன் குருவாக நினைக்கும் சீடர். படப்பிடிப்பில் 16 செல்வங்களையும் அனைவரும் பெற வேண்டி அதை வரிசைப்படுத்தி பாடல் பாடி வாழ்த்தினார். நான் இந்த அர்ப்பணிப்பான பெரிய மனிதனின் ஆசிகளாக அதை மனதார ஏற்றுக்கொண்டேன். படப்பிடிப்பு களத்தில் அவர் பகுதி நிறைவுநாளில் அவருக்கு பிறந்தாள் வந்தது. கேக் வெட்டி வாழ்த்தினோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தையும், ஜி.வி. பிரகாஷிற்கு ‘வெற்றித்தமிழன்’ என்ற பட்டத்தையும் சீனு ராமசாமி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.