சீனு ராமசாமி இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. அருளானந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் சீனு ராமசாமியை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது சீனு ராமசாமி பேசுகையில், “இந்த சமூகத்தில் விற்பனை ஆகாத பொருள்மீது யாருக்கும் விருப்பம் இருப்பது கிடையாது. என்னுடைய படங்களும் அப்படித்தான். சில கமர்ஷியலான விஷயங்களை சேர்த்து படம் எடுப்பது ஒருவகையான வியாபாரம் என்றால் ஜனரஞ்சகமான ஒரு படத்தை உருவாக்கி மக்களை பார்க்க வைப்பது இன்னொருவகையான வியாபாரம். ஒரு படம் உள்ளூர் ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். அதே படம் வெளிநாட்டில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். இதுதான் என்னுடைய நோக்கம். இது போன்ற சவால்களைத்தான் நான் கையில் எடுத்துள்ளேன்.
அமெரிக்கா, மாஸ்கோ போன்ற நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் என்னுடைய மாமனிதன் படத்தை பார்க்கும்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. ஒரு படத்தை உள்ளூருக்காக எடுக்கும்போது அந்த படத்தின் மற்றொரு வெர்ஷனை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம் என தெரிய வந்தது. ஏகன், பிரிகிடா ஆகியோர் இயல்பான தோற்றத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் நடித்தவர்கள் புதுமுக நடிகர்போல இருக்க மாட்டார்கள். யோகி பாபு இந்த படத்தின் தூணாக இருக்கிறார். வசனங்களை பேச நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் மெளனங்களை கடத்த நடிகர் வேண்டும் என்பதற்காகத்தான் யோகி பாபுபை இந்த படத்தில் நடிக்க வைத்தோம். படத்தின் இரண்டாம் பகுதியில் யோகி பாபு வேறு ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் திருநங்கைகளுக்கு தனியாக ஒரு கொண்டாட்ட பாடல் உள்ளது. அதில் அவர்களுடைய பிரச்சனைகளை பேசுவதுபோல் அமைந்துள்ளது. படத்தில் கொஞ்சம் கருத்து இருக்கும். ஆனால் அது அட்வைஸாக இருக்காது” என்றார். அதன் பிறகு விருது குறித்து பேசிய அவர், “விருது என்றால் என்ன தெரியுமா மக்கள் இந்த படத்திற்கு தரும் ஆதரவும் அன்பும் தான். அதுதான் முதல் விருது. என்னை பொருத்தவரை மக்களை கண்டிப்பாக ஏமாற்ற மாட்டேன். மக்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார். இவர் தென்மேற்குப் பருவக் காற்று படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.