Skip to main content

"என்னை இப்படி அழ வச்சுட்டியே" - சத்யராஜிடம் நெகிழ்ந்த கலைஞர்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

sathyaraj shared how ex cm kalaignar react to Onbadhu Roobai Nottu movie

 

தங்கர் பச்சான் இயக்கத்தில் ஏ.எஸ் கணேசன் தயாரிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் 'ஒன்பது ருபாய் நோட்டு'. வழக்கமான தன் ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான காட்சிகளை அழகாக காண்பித்திருப்பர். இப்படத்தை பார்த்த பலரும், தங்களை நெகிழ வைத்துவிட்டதாக பேசியிருந்தனர். குறிப்பாக சத்யராஜின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 
 

இந்நிலையில், இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என்கிற அற்புதமான காவியம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது. அந்தப் படத்தில் நான் மாதவ படையாட்சி என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறேன் என அனைவரும் சொல்வார்கள். அதை வாழவைத்தது தங்கர் பச்சான். இது அவர் எழுதிய கதையல்ல. அவருக்குள் ஊறிய கதை. மண்சார்ந்த கதை . அவர் கண்முன் நடந்த கதையைக் கூறினால் எப்படியிருக்கும், அப்படித்தான் படமும். படம் பார்த்த அனைவருக்கும் படம் பார்த்த உணர்வு இருக்காது; நிகழ்வுகளை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த உணர்வு இருக்கும்.

 

இப்படியான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது பாக்கியம். பொதுவாக நான் நடித்த படங்களை கலைஞர் பார்த்து நிறை, குறைகளை மனம் திறந்து கூறுவார். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்து கலைஞர் எழுந்திருக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் சென்று நின்றேன். அமைதியாக இருந்தார். பின்பு, என் கையைப் பிடித்துக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர். நானும் கலங்கிவிட்டேன். அவர் ரொம்ப நேரம் எதுவும் பேசவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே என்னைக் கட்டியணைத்து, ‘என்னை இப்படி அழ வச்சுட்டியே’ எனக் கூறினார். பின்பு தங்கர் பச்சானை கட்டியணைத்துப் பாராட்டினார். இப்படியான கலைஞரை நான் பார்த்ததில்லை. அவரின் சொல்வளம் எல்லோருக்கும் தெரிந்தது. அப்படிப்பட்ட கலைஞரை கலங்க வைத்த படம் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’.

 

இப்போது 15 வருடம் கழித்து தங்கர் பச்சானுக்கு மறுபடியும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் தொடர்பாக தங்கர் பச்சான், "தமிழ் மரபின் குடும்ப உறவுகள், உழவுக் குடும்பத்தின் சிக்கல்கள், சினிமாத்தனமற்ற உரையாடல்கள் என அனைத்தும் கொண்ட இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம். நான் மட்டும் நினைத்தால் அவைகள் இடேறாது" என கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்