தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு ஊருக்கு மாற்றியது ஐ.பி.எல் நிர்வாகம். மேலும் இந்த போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது பல பேர் காயமடைந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மோதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், கண்டமும் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜும் இந்த போராட்ட மோதல்கள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுளார். அதில் அவர் பேசுகையில்...."வணக்கம், எல்லோருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்தை காப்பாற்ற வருமானத்தை நோக்கிய பயணம் இருக்கிறது. நமக்காக போராடுகிற போராளிகளுக்கும் அப்படிப்பட்ட குடும்பம் இருக்கிறது. வருமானம் நோக்கிய பயணம் இருக்கிறது. ஆனால், ஒரு பொதுநலத்துக்காக, சுயநலம் கருதாமல் குடும்பத்தை மறந்து, வருமானத்தை துறந்து நமக்காக போராடுகிற போராளிகள் எவ்வுளவு உயர்ந்தவர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறு களத்தில் இறங்கி போராடும் போது, கைது செய்யப்படலாம், வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் ஒரு பொதுநலத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்.
இன்று அவர்களுடைய போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டிருக்கிறது. அந்த போராட்டக் களத்தில் நிற்பவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள். அவர்களுடைய வீரத்தையும், தியாகத்தையும் நான் வாழ்த்துகிறேன் என்று சொல்ல வரவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால், நாம் யாரை வாழ்த்துகிறோமோ அவர்களை விட நமக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் வாழ்த்த வேண்டும், இல்லையேல் வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். இந்த போராட்டக் களத்தில் இருக்கும் போராளிகள் நம்மை விட, என்னைவிட வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்தவர்கள். ஆகவே அவர்களை நாம், நான் வாழ்த்த முடியாது, போற்ற முடியும், வணங்க முடியும். அவர்களை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன்" என்றார்.