
தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பின்பு டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து பேசிய சசிகாந்த், “முதலில் நான் ஒரு ஆர்கிடெக்ட். பின்பு தான் தயாரிப்பாளர். ஆனால் சினிமாவில் நுழைவதற்கு முன் கதை சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை முறையாக கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?. இயக்குநராக உருவாகுவதற்கு தான் தயாரிப்பாளராக உள்ளே வந்தேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டெஸ்டிங் நேரம் வரும். இந்தப் படத்துல ஒரு மூணு கேரக்டருக்கும் அப்படியொரு இக்கட்டான நேரம் வருது. அந்த டெஸ்டை அவங்க எப்படி எதிர்கொள்றாங்க அப்படிங்கறது கதை” என்றார்.