இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி, பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம், ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதனிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் 'சர்க்காரு வரி பாட்ட' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ராஜமௌலி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளதால், மகேஷ் பாபுவின் 'சர்க்காரு வரி பாட்ட' படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல இயக்குநர் சந்திரா சாகர் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண், ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பீம்லா நாயக்' திரைப்படமும், இயக்குநர் அனில் ரவுபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், ரவி தேஜ், தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப் 3' திரைப்படமும் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்திற்காக பொங்கல் ரிலீஸிலிருந்து பின்வாங்கியுள்ளன.
இந்நிலையில், 'சர்க்காரு வரி பாட்ட', பீம்லா நாயக்', ‘எஃப் 3’ ஆகிய மூன்று படக்குழுவினருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் இயக்குநர் ராஜமௌலி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.