அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு இரண்டு படங்கள் இந்த பொங்கலுக்காக வெளியானது.
இருவரின் ரசிகர்களும், அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வெளியானதால் , திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு கொண்டாடினர். அதன்படி அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் பரத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். சென்னை ரோகிணி திரையரங்கம் முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது ஏறி பரத்குமார் நடனமாடிய போது கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அடுத்த நாளே அந்த இளைஞருக்கான இறுதி சடங்கெல்லாம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நடிகரும் சமூகநீதி மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இறந்த பரத்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னார். அப்போது செய்தியாளர்களிடம் “யார் ரசிகராக இருந்தால் என்ன அவர் சினிமா ரசிகர் தான், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டியது சினிமாக்காரர்களின் கடமை என்றார். மேலும் அவர் நிதி உதவி எதுவும் நான் வழங்கவில்லை, நிதி கொடுத்தால் உயிர் வந்திடுமா? அந்த குடும்பத்திற்கு வேறு எதாவது உதவி என்றால் செய்யச்சொல்லி இந்த பகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்றார்.