காதலிசம் படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர், கதாசிரியர் சந்தோஷ் நம்பிராஜன் அவர்களோடு ஒரு சிறப்பு நேர்காணல்...
சிங்கப்பூரில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நிறைய திறமையான நடிகர்கள் அங்கு இருக்கின்றனர். ஆனால் அங்குள்ள அமைப்புகள் தனித்தனியாக இருக்கின்றன. எனவே கோலிவுட் போல் சிங்காவுட் என்கிற அமைப்பை அங்கு உருவாக்கினோம். தமிழ் படங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களை இணைக்கும் பாலங்களாக இருக்கின்றன. ஓடிடி மூலம் இன்னும் நிறைய திறமைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். காதலை மையமாக வைத்து சிங்கப்பூரில் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அப்படி உருவானது தான் காதலிசம் கதை.
லிவிங் டுகெதர் பற்றி இந்தப் படம் பேசுகிறது. தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி தான் வாழ்கிறார்கள். இப்போது காலம் மாறி வருகிறது. இந்தக் கதையை இன்னொருவருக்கு புரிய வைத்து நடிக்க வைப்பதை விட, நானே நடிப்பது சரியானது என்று முடிவு செய்து நடித்தேன். புதிதாக ஒருவரை நடிக்க வைத்து அவரை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்வது தான் இயக்குநர் பாலா சாரின் ஸ்டைல். அவரோடு நான் நிறைய டிராவல் செய்திருக்கிறேன். சிற்பம் போல் அவர் நடிகர்களை செதுக்குவார். ஸ்டார்களோடு வேலை செய்வதை விட புதியவர்களோடு வேலை செய்வதே அவருக்கு சரியாக இருக்கும்.
ஒரு நடிகனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் பாலா சார் வல்லவர். அவர் ஜாலியான மனிதர் தான். இயல்பிலேயே அவர் மென்மையானவர். சரித்திர கதைகளை எடுப்பதற்கு இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமக்கு நிறைய உதவும். காதலிசம் படத்துக்காக சிங்கப்பூரில் இருக்கும் பல நடிகர்களை நான் பயன்படுத்தியுள்ளேன். பொதுவாகவே நான் நிறைய படங்கள் பார்ப்பேன். 80களில் தமிழ் சினிமாவில் நிறைய வெரைட்டியான இயக்குநர்கள் இருந்தார்கள். எனவே அந்த காலகட்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் நிறைய படங்கள் எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.