தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த ஆண்டு அக்டோபரில் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய சமந்தா கடந்த பிப்ரவரி முதல் மீண்டும் பழையபடி படம் நடிக்கத் தொடங்கினார்.
அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' மற்றும் வருண் தவானின் 'சிட்டாடெல்' வெப் தொடர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் 'குஷி' படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'சிட்டாடெல்' தொடர் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனை ராஜ் மற்றும் டீகே இயக்கி வருகின்றனர். இத்தொடர் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் வெளியான சிட்டாடெல் தொடரின் இந்திய பதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'சிட்டாடெல்' வெப் தொடரின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "என்ன வரப்போகிறது என்பதை நீங்கள் அறிந்தால், ப்ரேக் எடுப்பது ஒரு மோசமான விஷயம் கிடையாது. ராஜ் மற்றும் டீகே இருவரும் எனக்கு தெரியாத குடும்பம் போல் இருந்தனர். ஒவ்வொரு போரிலும் போராட என்னை ஒருபோதும் கைவிடாமல் உதவியதற்கு நன்றி. உலகில் உள்ள அனைத்தையும் விட நான் உங்களை பெருமைப்படுத்த விரும்புகிறேன். ஒரு வாழ்நாள் கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. அதாவது நீங்கள் எனக்கு அடுத்த கதாபாத்திரம் எழுதும் வரை" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.