தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த ஆண்டு அக்டோபரில் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் இதற்கடுத்து அவர் கலந்து கொண்ட பேட்டிகளில் மிகவும் எமோஷனலாக பேசி கண்கலங்கினார். அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவந்தனர்.
அதையடுத்து இந்த நோயின் பாதிப்பில் இருந்து பூரண குணமடையும் வரை சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருக்க அவர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய சமந்தா கடந்த பிப்ரவரி முதல் மீண்டும் பழையபடி படம் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் கோவில்களுக்கு சென்று உடல்நலம் முன்னேற சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் செர்பியாவில் உள்ள சர்ச்சில் வழிபாடு செய்துள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து தனக்கு வந்த நோயால் எவ்வாறு வாழ்க்கை பாதித்துள்ளது என்பது குறித்து உருக்கமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நோய் கண்டறியப்பட்டு 1 வருடம் ஆகிறது. இந்த 1 வருடம் எனது உடலுடன் பல போராட்டங்கள். எனது சினிமா வாழ்க்கையிலும் பல தோல்விகள். அது வாழ்க்கையை இன்னும் சுவாரசியமாக மாற்றியது.
இந்த ஒரு வருடம் பல பிரார்த்தனைகள். ஆசிர்வாதத்திற்கும் பரிசுக்காகவும் அல்ல. வலிமையையும் அமைதியையும் பெற பிரார்த்தனை செய்தேன். வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே ஒரு வெற்றி தான். அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வலிமையைத் தேடுபவர்களுக்கு கடவுள்கள் தாமதிக்கலாம், ஆனால் ஒரு போதும் மறுக்கமாட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.