உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "நடிகர் சல்மான் கான் போதைப்பொருள் பயன்படுத்துகிறார். அமீர் கான் பற்றி தெரியவில்லை. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தி, இதற்காக சிறைக்கும் சென்றுள்ளார். நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து கடவுளுக்குத்தான் தெரியும்.
திரைத்துறை துறை முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. அரசியலிலும் கூட போதைப்பொருள் இருக்கிறது. குறிப்பாக தேர்தலின்போது மதுபானங்கள் இலவசமாக விற்கப்படுகின்றன. இது உள்ளிட்ட அனைத்து வகை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும். அதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இதற்காக நாங்கள் ஒரு இயக்கத்தைத் தொடங்கப் போகிறோம்" என்று பேசினார்.
இப்போது பாபா ராம் தேவின் பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு கரோனா காலகட்டத்தில் அலோபதி மருத்துவம் குறித்து இவர் பேசிய பேச்சுக்கு அகில இந்திய மருத்துவர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அலோபதி மருத்துவம் குறித்து ராம்தேவ் அவதூறு பரப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.