பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் அவர் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிப்பதற்காக புகுந்துள்ளார். அப்போது அவருடன் ஏற்பட்ட தகராறில் சைஃப் அலி கானுக்கு ஆறு இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. அந்த மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
பின்பு படுகாயமடைந்த சைஃப் அலி கான் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவருக்கு முதுகு தண்டுவடத்தின் அருகே ஒரு கத்திக்குத்து ஆழமாக இறங்கியதால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது உடலில் கத்தியின் ஒரு துண்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு அபாயக்கட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆனார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து குத்திய நபரை போலிஸார் கைது செய்தனர்.
முன்பு சம்பவத்தின் போது கத்திகுத்து வாங்கிய சைஃப் அலி கானை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரது வீட்டு பணிப்பெண்கள் முயன்றனர். ஆனால் அப்போது ட்ரைவர் இல்லாததால் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த ஆட்டோ ரிக்ஷா ட்ரைவர் பஜன் சிங் ராணாவை தற்போது சைஃப் அலி கான் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நிதியுதவியும் வழங்கியுள்ளார். இதையடுத்து அந்த ட்ரைவர் செய்தியாளர்களை சந்தித்து சைஃப் அலி கானுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், “சைஃப் அலி கான் எனக்கு 50 ஆயிரம் அல்லது 1 லட்சம் கொடுத்தார் என கூறட்டும். ஆனால் அவர் எனக்கு கொடுத்ததை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அதை அவர் வெளியில் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அதனால் அந்த வாக்குறுதியை நான் காப்பாற்ற வேண்டும். அதுமட்டுமில்லை அந்த உதவி அவருக்கும் எனக்கும் இடையிலானது” என்றார்.