Skip to main content

"இது தான் முதல் முறை" - சாய் பல்லவி உருக்கம் !

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

sai pallavi explain recent controversy speech

 

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் இணைந்து  விரத பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்"  என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தாலும் இந்து அமைப்பினர் மற்றும் நடிகை விஜய் சாந்தி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இது குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதல் முறையாக இது போன்று வீடியோ வெளியிட்டு பேசுகிறேன். சமீபத்தில் நான் அளித்த போட்டி சர்ச்சையாக்கப்பட்டது.  என்னைப் பொறுத்தவரை அனைவரும் ஒன்றுதான் அதைத்தான் நான் அந்த பேட்டியில் சொன்னேன். ஒரு மருத்துவ பட்டதாரியாக எந்த ஒரு உயிரையும் சாதி, மதம், மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது. என்னுடைய 14 வருட பள்ளி வாழ்க்கையில் இந்தியர்கள் அனைவரும் சமம். அவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று உறுதிமொழி எடுத்துள்ளேன். அது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. சிறுவயதில் சாதி, மதம் என பிரித்து பார்த்ததில்லை. எப்போதும் நடுநிலையாக இருந்திருக்கிறோம். எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிலர் அந்த முழு பேட்டியை கேட்காமல் ஒரு சிறு பகுதியை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் யாரும் நான் சொல்லியதின் உண்மைத் தன்மையை ஆராயவில்லை. இனி என் இதயத்தில் உள்ளதை பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பேன். வன்முறை எந்த வடிவத்திலும் தவறு ,எந்த மதத்தில் பெயரால் நடக்கும் வன்முறையும் பெரும் பாவம் என்றும் நம்புகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.