வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த மாதத்தின் இறுதியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "இந்தப் படத்தில் எனக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், பைனான்சியர் என அனைவரும் மேடையில் இருப்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். அவர்களை மேடையேற்றிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்துகள். படம் ஹிட் அடித்தவுடன் பிரபலங்களை மட்டும் அழைத்து நட்சத்திர விடுதியில் கொண்டாடாமல் அனைவரையும் இப்படி அழைத்து கொண்டாடுவதுதான் முறை.
இஸ்லாமிய மதங்களுக்கு சாயம் பூசும் இந்திய அரசியலையும் தமிழ்நாட்டின் வாரிசு அரசியலையும் ஒன்றாக்கி தன்னுடைய திரைக்கதை மூலம் படம் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றவைத்துவிட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு. இரண்டாவது முறை படம் பார்க்கும்போது இசையை கேட்டு மிரண்டுவிட்டேன். இசைஞானி இளையராஜாவின் 2k வெர்ஷன்தான் யுவன்ஷங்கர் ராஜா.
இவ்வளவு பெரிய உண்மையான வெற்றியை படம் பெற்றிருக்கிறது. ஆனால், வெற்றிவிழாவில் படத்தின் நாயகன் இல்லை. எனக்கு இது புரியவில்லை. இந்தப் படம் அவருக்கு பெரிய திருப்புமுனை. இந்த வெற்றியை இங்கு வந்து நம்மோடு அவர் கொண்டாடியிருக்க வேண்டும். அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்துள்ளார். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒரு தயாரிப்பாளர் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார் என்றால் அந்த வெற்றியைக் கொண்டாட கதாநாயகன் இங்கிருக்க வேண்டும். படப்பிடிப்பு நாட்களில் எப்படி இருந்தோமா பட வெற்றிக்கு பிறகும் அப்படித்தான் இருக்கவேண்டும்" எனக் கூறினார்.