தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தொடக்கத்தில் தன் படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்த இவர். தற்போது பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களுக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்ட சந்திரசேகர். ஹரித்துவார், ஹிமாலயாஸ் என பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிமாலயாஸில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ராயல் என்பீல்ட் புல்லட் பைக்கில் சாய்ந்துகொண்டு போஸ் கொடுத்திருக்கும் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இணையவாசிகள் பலரும் அஜித்துக்கே டஃப் கொடுக்கும் விஜய்யின் தந்தை என கமண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் அஜித் தன் பைக்கில் லடாக் உள்ளிட்ட பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது நினைவுகூரத்தக்கது.
எங்கு சென்றாலும் தனது உதவியாளர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், இந்தப் பயணத்திலும் அதைத் தொடர்கிறார். அந்த வகையில் முன்னதாக ஹரித்துவாரில் தனது உதவியாளர்களை சைக்கிள் ரிக்ஷாவில் அமரவைத்து சிறிது தூரம் ஓட்டிச் சென்ற புகைப்படம் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.