ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 95வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போட்டிக்கு குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானது. இருப்பினும், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவின் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்தனர்.
இதையடுத்து ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் நாமினேஷனுக்கான முந்தைய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு முக்கியமான சில விருதுகளையும் வாங்கியுள்ளது.
அந்த வகையில் நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ராஜமௌலி வாங்கியுள்ளார். மேலும் ஆஸ்கருக்கு இணையாக திரைத்துறையில் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு, ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படம் தேர்வானது. இந்த விழா வரும் 10ஆம் தேதி (இந்திய நேரப்படி) நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரில் வரும் 9ஆம் தேதி ஐமேக்ஸ் திரையரங்கில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் திரையிடப்படவுள்ளது. இந்தத் திரையிடலில் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தத் திரையிடலுக்கான டிக்கெட்டுகள் வெறும் 98 வினாடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கு முன் எந்த ஒரு இந்தியத் திரைப்படத்திற்கும் இது போல் நடந்ததில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரையரங்கம் உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.