பிரம்மாண்ட இயக்குனர் ராஜ மௌலியின் அடுத்த படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக அலியா பாட் நடிக்கிறார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவைச் சேர்ந்த இரு புரட்சியாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் எடுக்கப்படுகிறது. ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கொமரம் பீமாகாவும் நடித்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கொமரம் பீம், பழங்குடி இன மக்களின் தலைவர். நீர் ,நிலம் ,காடு ஆகியவை பழங்குடியினரின் உரிமை என முழங்கியவர். பழங்குடிகளின் உரிமைக்காக நிலப் பிரபுக்களையும், நிஜாம் ஆட்சியாளர்களையும் எதிர்த்துக் கொரில்லா முறையில் போரிட்டவர். ஆனால், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் வரும் என்.டி.ஆர்., இஸ்லாமியர் போல குல்லா அணிந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குப் பழங்குடியின மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. கொமரம் பீமின் பேரனும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், அந்தக் காட்சியை நீக்க வேண்டும் எனவும் ராஜமௌலியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அதிலாபாத் பா.ஜ.க எம்.பியான சோயம் பாபுராவ் ராஜமௌலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொமரம் பீம் நிஜாம்களை எதிர்த்துப் போராடியவர். அவர் குல்லா அணிந்திருப்பதுபோல், காட்சி அமைப்பது பழங்குடியின மக்களை அவமதிப்பது போன்றது. அந்த காட்சியைப் படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், படம் வெளியாகும் தியேட்டர்கள் கொளுத்தப்படும் எனக் சோயம் பாபுராவ் எச்சரித்துள்ளார்.
மேலும், வரலாற்றை எப்படித் திரிக்கலாம் என ராஜமௌலியிடம் கேள்வியெழுப்பியுள்ள அவர், முதலில் ராஜமௌலி கொமரம் பீம் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டுமெனவும், பழங்குடியின மக்களுக்கு கொமரம் பீம் கடவுள் போன்றவர், அவரை தவறாகக் காட்டுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.