ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அந்த சந்திப்பில், 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து இயக்குநர் ராஜமௌலி அளித்த பேட்டி பின்வருமாறு...
"கரோனா காரணமாக பலமுறை ரீலிஸ் தள்ளிப்போய் ஒருவழியாக தற்போது படம் திரைக்குவருகிறது. அந்த வகையில், ரொம்பவும் சந்தோசம். படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களோ அதே அளவிலான ஆர்வத்துடன் நாங்களும் இருக்கிறோம். அதேநேரத்தில், நம்முடைய கையில் எதுவும் கிடையாது என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.
ஒரு நடிகரும் இயக்குநரும் ஒருவருக்கொருவர் திறந்த மனதுடன் இருப்பது மிக முக்கியம். இருவருமே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே எனக்கு அது மாதிரியான உறவு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் இருந்தது. அதனால் இந்தப் படம் எனக்கு ரொம்பவும் எளிமையாக இருந்தது.
இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனையான படம். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மட்டும்தான் உண்மையானவை. கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் அனைத்து சம்பவங்களும் என்னுடைய கற்பனைதான். இந்தப் படத்தின் ஹீரோ, வில்லன், ஹீரோயின் என அனைத்துமே ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும்தான். இவர்களுக்கு இடையேயான நட்புதான் ஆர்.ஆர்.ஆர்". இவ்வாறு ராஜமௌலி தெரிவித்தார்.