சின்னதிரை மற்றும் மேடை நிகழ்வில் மிமிக்ரி கலைஞராக இருந்து திரைத்துறையில் பிரபலமானவர் ரோபோ சங்கர். மாரி, விஸ்வாசம், கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக உடல்நிலை மெலிந்தபடியே காணப்படுகிறார். அதற்கு உடல்நிலை சரியில்லாதது காரணம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்நிலையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது உடல்நிலை குறித்து ரோபோ சங்கர் உருக்கமாக பேசினார். ஒரு தனியார் கல்லூரியில் நடந்த இந்நிகழ்வில் ரோபோ சங்கர் பேசியதாவது, "சமீப காலமாக ஒரு 4 மாதங்கள் என்னை பற்றி தான் யூடியூப்பில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தெரியாமல் ஒரு கிளியை வளர்த்தேன். அது நம்முடன் பேசும், விளையாடும் என நினைத்து வளர்த்தேன். அது என்ன வகையான கிளி என்பது கூட தெரியாது. ஆனால் அது பெரும் பிரச்சனையாகி விட்டது. அதனால் பெரும்பாடு பட்டேன். பின்பு அதிலிருந்து வெளியில் வந்தேன்.
அதற்கடுத்து என் உடல்நலம் குறித்த செய்தி. முதலில் ஒரு படத்துக்காக குறைத்தேன். பின்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதால் 5 மாசம் படுத்த படுக்கையாக இருந்தேன். சாவின் விளிம்புக்கு போய்விட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள். அந்த பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு இவர் ஏன் வந்திருக்கிறார் என நீங்கள் நினைப்பீர்கள். அதற்கு தகுதியான ஆள் நான். இப்போது நான் அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறேன்.
ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கெல்லாம் சென்று விட்டேன். கடந்த ஜனவரி மாதம் வாழ்க்கையே வெறுத்து அந்த பழக்கம் இல்லாமல் இருக்கவே முடியவில்லை. இரவு நேரத்தில் எழுந்து கிறுக்கு மாதிரி அலைய ஆரம்பிச்சுட்டேன். அந்த நேரத்தில் நக்கீரன் ஆசிரியர் சார் தான் என்னை சரியான மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு போனார். அதன்பிறகு தான் என் உடலில் எந்தந்த உறுப்புகள் எல்லாம் சேதமடைந்துள்ளது என்பது தெரியவந்தது. மருத்துவரின் அறிவுரையை கேட்டுக்கொண்டு எல்லா பழக்கத்தை விட்டுவிட்டேன். என்னை இரவு பகலாக பார்த்துக்கொண்டது என்னுடைய குடும்பம் தான். இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன்" என்றார். பின்பு மாணவர்களுக்கு போதைப்பொருள் கூடாது என அறிவுரை வழங்கினார்.