கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க... ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு...’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.