Skip to main content

"ஜட்ஜ்கிட்ட பேசுறீங்க... அமைதியா பேசுங்கனு சூர்யா சொன்னார்" - ஜெய் பீம் அனுபவம் பகிரும் ரவி வெங்கடராமன்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

Ravi Venkatraman

 

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ரவி வெங்கடராமனோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அந்த சந்திப்பில் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"என்னுடைய அப்பா மலையாள சினிமாவில் எடிட்டராக இருந்தார். வீட்டிற்கு அப்பாவை பார்க்க வரும் அனைவரும் சினிமா பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். கேரளாவில் இருந்து நிறைய பேர் வாய்ப்பு தேடியும் வருவார்கள். அவர்களுடன் பேசிப்பேசி எனக்குள் சினிமா மோகம் வர ஆரம்பித்தது. என்னுடைய சித்தப்பா சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். வாரந்தோறும் என்னை தியேட்டருக்கு அழைத்துச் செல்வார். இவையெல்லாம்தான் சினிமா ஆசையை எனக்குள் ஏற்படுத்தின. கல்லூரி முடித்த உடனேயே நடிக்க வாய்ப்பு தேடினேன். ஏதாவது நாடகத்தில் நடித்துவிட்டு வா என்றார்கள். அதன் பிறகு சில நாடகங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். 1990இல் கலைஞர் தலைமையில் நடந்த சூர்யவம்சம் நாடகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தேன். ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றால் டான்ஸ் தெரியவேண்டும் என்றார்கள். நான் டான்ஸ் கற்க எவ்வளவோ முயற்சித்தும் என்னால் முடியவில்லை. பின், கலை இயக்குநர் சாபு சிரிலிடம் உதவி கலை இயக்குநராக பணியாற்றினேன். கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, தமிழன் உட்பட பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். 

 

ad

 

ஒரு கட்டத்தில் சாபு சிரில் சார் பாலிவுட் பட வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்ததும் மும்பை சென்றுவிட்டார். அதன் பிறகு, சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். 5 ஆண்டுகளுக்கு பிறகு நாடோடிகள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்தில் போலீஸ் கதாபாத்திரங்கள்தான் அதிகம் கிடைத்தன. இன்று 55 படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். குள்ளநரி கூட்டம் மற்றும் மாநகரம் படத்திற்கு மக்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுகள் மறக்க முடியாதவை. 

 

ஜெய் பீம் படத்தை நான் பார்ப்பதற்குள்ளேயே நிறைய பேர் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்த சமயத்தில் நான் பொள்ளாச்சியில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அங்கேயே ரோட்டில் போகும்போது நிறைய மக்கள் பாராட்டினார்கள். அப்போதே இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றிபெறும் என்பது தெரிந்துவிட்டது. ஜெய் பீம் படத்தில் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கினார். க்ளைமேக்ஸ் எடுக்கும்போதெல்லாம் சூர்யா சாரே இப்படி பண்ணுங்க... அப்படி பண்ணுங்க எனச் சொல்லிக்கொடுத்தார். என்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு மொத்தம் நான்கு நாட்களுக்கு இருந்தது. க்ளைமேக்ஸ் காட்சியில், சக அதிகாரிங்க வற்புறுத்துனதுனால கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன் என்று நான் ஒரு வசனம் கூறுவேன். அதை கொஞ்சம் சத்தமாக சொன்னவுடன், சூர்யா சார் வந்து, ஜட்ஜ்கிட்ட பேசுறீங்க... கொஞ்சம் மெதுவா பேசுங்க என்றார். 

 

ஒரு காலத்தில் பாரதிராஜா சாரிடம் வாய்ப்பு கேட்டு அவர் அலுவலக வாசலில் நின்றிருக்கிறேன். என்ன படிச்சிருக்க என்று கேட்டுவிட்டு, படிச்சிட்டு ஏன்டா நடிக்க வந்த என்று என்னை விரட்டிவிட்டார். தற்போது அவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம், வாய்ப்பு கேட்டு வந்தபோது என்னை நீங்கள் தூரத்திவிட்டீர்கள் சார் என்றேன். அதான் இன்றைக்கு சேர்ந்து நடித்துவிட்டோமே.... அதுவே ரொம்ப சந்தோசம் என்றார்".

 

 

சார்ந்த செய்திகள்