தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, இந்தியில் அமிதாப்பச்சனின் 'குட் பை' மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் 'மிஷன் மஜ்னு' உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டிலும் கவனம் பெற்றுள்ளார். இப்போது இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்திலும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு 'புஷ்பா 2' படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு ஆங்கில இணைய ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள ராஷ்மிகா, திரைத்துறை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். ‘பெண்களின் தோற்றம் திரைத்துறையில் எவ்வளவு முக்கியம்’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ராஷ்மிகா, "துரதிர்ஷ்டவசமாக நாம் ஒரு ஆணாதிக்க உலகில் தான் வாழ்கிறோம்" என வேதனையுடன் சொல்கிறார். மேலும் "முன்பு ஸ்டைலிங்கில் பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது. ஒவ்வொரு கலாச்சாரமும் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதற்கு வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளது. ஆனால் பெண்களின் ஃபேஷன் மிகப்பெரிய அளவில் தற்போது மாறிவிட்டது. இப்போது ஸ்டைலாக இருப்பதற்கு அனைவருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அது அதிகரித்து வருகிறது" என்றார்.
மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய ராஷ்மிகா, "சிறிய சிறிய விஷயங்களும் எனக்கு முக்கியம். நான் எழுந்ததும் என் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுகிறேன். என் நண்பர்களைச் சந்திக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை; அவை ஒரு நபரை உருவாக்கலாம் அல்லது மனத் தளர்வை உண்டாக்கலாம். அதனால்தான் யாராவது ஏதாவது சொன்னால் அது முக்கியமானதாக நான் பார்க்கிறேன். வீட்டிற்கு திரும்பினால் அனைவரின் பாதங்களையும் மரியாதையுடன் தொட்டு வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். நான் யாரையும் வேறுபடுத்த விரும்பவில்லை. அதனால் தான் எங்கள் வீட்டு உதவியாளர்களின் கால்களையும் தொட்டு வணங்குகிறேன்." என்றார்.