பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு எதிராக இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும், அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கல்கி ஆகியோர் கடிதம் வெளியிட்டுள்ளனர்.
அதேபோல, அனுராக் காஷ்யப்புடன் ஒன்றிணைந்து வேலை பார்த்த ஹீரோயின்கள் மற்றும் பெண் பணியாளர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பலரும் அவருக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து அனுராக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அனுராக் காஷ்யப் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலேவை நேற்று நேரில் சந்தித்து அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மும்பை காவல்துறை இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, ராம்தாஸ் அத்வாலே ட்விட்டரில், ‘பாயல் கோஷின் புகாரின் பேரில் மும்பை காவல்துறை விரைவாக அனுராக் காஷ்யப்பை கைது செய்யவேண்டும், இல்லையென்றால், எங்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். விரைவில் இந்த விவகாரம் குறித்து அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதவுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.