சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை ரஜினி மற்றும் கமல் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர்.
இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி கமல் குறித்தும் இயக்குனர் பாலசந்தர் குறித்தும் பேசினார். அதில், “கமலின் கலையுலக தகப்பனார், என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை ராஜ்கமல் அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் கமல். அழகான, பிரம்மாண்டமான அலுவலகம். கமல் அரசியல் வந்தால் கூட தாய் வீடான சினிமாவை விடமாட்டார். கமலுக்கு கலை உயிர், எங்கு சென்றாலும் அதை மறக்கவேமாட்டார்.
ராஜ்கமல் தயாரிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். அந்த படத்தை நள்ளிரவு இரண்டு மணிக்கு பார்த்து முடித்துவிட்டு உடனடியாக கமல் வீட்டிற்கு சென்று அவரை எழுப்பி கைகொடுத்து வாழ்த்தினேன். அவர்கள் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார். எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன்.
கே.பாலசந்தர் சிலையை திறந்தவுடன் வார்த்தைகள் சொல்ல முடியவில்லை. பெரிய மகான் நம்முடன் இல்லை. சிலையை பார்க்கும் போது அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது. தமிழ் மட்டும் கற்றுக் கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார் என்று கே.பாலசந்தர் என்னிடம் சொன்னார். அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அவர் மீது அபார பிரியம், தூரத்தில் இருந்து கமலை ரசித்துக் கொண்டே இருப்பார்” என்றார்.