சமீபத்தில் இமயமலை பயணம் முடித்த ரஜினி, தொடர்ந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து வந்தார். இதையடுத்து பெங்களூரு சென்ற அவர் அங்குள்ள ராகவேந்திரா கோவிலில் வழிபட்டார். பின்பு திடீர் சர்ப்ரைஸாக அவர் நடத்துநராக பணியாற்றிய போக்குவரத்து பணிமனைக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்களிடம் சில நிமிடங்கள் உரையாடி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து ரஜினியும் அவரது சகோதரர் சத்தியநாராயணன் ஆகியோர் கார் மூலம் சென்னை நோக்கி பயணித்திருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி வந்த போது தனது சொந்த ஊரான நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு ரஜினி சென்றார். அங்கு அவரது பெற்றோரின் சிலை இருக்கும் நிலையில் அதனை ரஜினியின் சகோதரர் பராமரித்து வருகிறார். அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ரஜினி. முதல் முறையாக தன் சொந்த ஊருக்கு ரஜினி சென்றுள்ளதாக கூறப்படும் வேளையில், இந்நிகழ்வு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரஜினி நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் ரூ. 600 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.