உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் வேகமெடுத்துள்ள கரோனா பரவல், இந்தியாவிலும் கரோனா இரண்டாம் அலையாக உருப்பெற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் போதிய படுக்கையின்மை, ஆக்சிஜன் பற்றாக்குறை என இதுவரை எதிர்கொண்டிடாத ஒரு நெருக்கடிநிலையை இந்தியா சந்தித்துள்ளது. குறிப்பாக டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெளிவரும் செய்திகள் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளன. மக்களிடையே நிலவும் அஜாக்கிரதை தன்மையும் அரசுகளின் கவனக் குறைவுமே இந்தியா எதிர்கொண்டுள்ள இந்தச் சிக்கலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு கரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பிற்கு தேர்தல் ஆணையமே முக்கிய காரணம் என சென்னை உயர்நீதிமன்றமும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், 'அன்றே சொன்ன ரஜினி' என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் களம்காணுவதாக அறிவித்திருந்தார். பின் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அதிரடியாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தான் ஏன் கட்சி தொடங்கவில்லை என்பதற்கு ரஜினிகாந்த் பல காரணங்களைக் கூறிருந்தார். அதில் ஒன்றாக, "இந்த கரோனா உருமாறி இரண்டாம் அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் ரஜினியின் இந்தக் கூற்றைத்தான் தற்போது ரஜினி ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் மக்களின் நலனிலும் ரசிகர்கள் நலனிலும் உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரே தலைவர் ரஜினிதான் என நெகிழ்ச்சியாக மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.