சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திரையரங்கிலும் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் 'அன்புத் தலைவரின் கைதிகள்' என்ற வாசகம் இடம் பெற்ற ஒரு பேனரைக் கையில் ஏந்தி, கைதிகள் போன்று உடை அணிந்து ரஜினி ரசிகர்கள் ஊர்வலமாக நடந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலையில் ரஜினி பேனருக்கு பாலாபிஷேகம் செய்து, 500 தேங்காய் உடைத்துக் கொண்டாடினர்.
ரசிகர்களைத் தாண்டி திரைப் பிரபலங்களும் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர். லதா ரஜினிகாந்த், திரையரங்கின் உள் கேக் வெட்டி மகிழ்ந்தார். மேலும் அனிருத் ரசிகர்களுடன் 'ஹுக்கும்...' பாடலைப் பாடி ரசிகர்களுடன் கொண்டாடினார். தனுஷ், ரம்யா கிருஷ்ணன், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகவா லாரன்ஸ், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், பாடலாசிரியர் சூப்பர் சுபு, உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியபோது இனி குடிப்பழக்கத்தை விடப்போவதாக தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "ஜெயிலர் படம் இன்று ரிலீஸாவதை முன்னிட்டு 20 ரஜினி ரசிகர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்திவைப்பதாக முடிவெடுத்துள்ளோம். இது மாபெரும் சபதமாக எடுத்துள்ளோம். ரஜினிக்கு நன்றி. அவரால் அனைவரும் திருந்துவார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி" என்றார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி நடந்த நிலையில், அதில் பேசிய ரஜினி "குடிப்பழக்கம், எனக்கு நானே வச்சுக்கிட்ட சூனியம். அது இல்லாமல் இருந்திருந்தால் சமுதாயத்துக்கு எவ்ளோவோ நல்லது பண்ணியிருப்பேன். அதனால் குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதை தயவு செய்து விட்டுவிடுங்கள்" என அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.