பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 350 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வருட சங்கராந்தியை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமெளலி பேசியுள்ளார். அதில்..."இது சுதந்திரத்துக்கு முந்தைய படம் என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டேன். அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் என்ற இரண்டு வரலாற்று நாயகர்களைப் பற்றிய திரைப்படம் இது. இருவருமே சுதந்திரப் போராட்ட ஆளுமைகள். ஆனால் நிஜ வாழ்வில் அவர்கள் சந்தித்துக் கொண்டது கிடையாது.
அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இருவரின் வாழ்விலும் சுவாரஸ்யமான பல ஒற்றுமைகள் உண்டு. 1920களில் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டுச் சென்று விடுகிறார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அவர்கள் மீண்டும் திரும்பி வந்து பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகச் சண்டையிட்டனர். அவர்கள் இருவரும் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் ஒரே மாதிரியானவை. இதைப் படிக்கும்போது இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை இது" என்றார்.