கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பீதியில் இருக்கிறது. பல லட்சம் மக்கள் இதனால் தங்களின் வாழ்வாதாராத்தை இழந்து தவிக்கின்றனர். தமிழகத்தில் அப்படி அவதிப்படுபவர்களுக்கு சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதியுதவியையும், நிவாரணப் பொருட்களையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று கோடி நிதியுதவி செய்த பின்னரும் பலருக்குத் தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் மற்ற பிரபலங்களிடம் உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்து ஒரு நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “எனது குரு சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. வணக்கம் நண்பர்களே, ரசிகர்களே, கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுப்பதாக நான் அறிவித்த பிறகு சினிமா துறையில் இருக்கும் மற்ற யூனியன்களைச் சேர்ந்த பலரும் என்னை உதவிக்கு அணுகி வருகின்றனர். எனவே, இந்த 3 கோடி ரூபாய் தவிர்த்து விநியோகஸ்தர் சங்கத்துக்காக டி.ஆர். சாருக்கு 15 லட்ச ரூபாயும், நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயும், துப்புரவுப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளேன்.
தற்போது செலவுகள் 3 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதால் 'லட்சுமி பாம்' படக்குழுவினர் சார்பில் என்னுடைய கடைசித் தொகையை நேரடியாகப் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பிவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். மக்களுக்குச் சேவை செய்ய என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்கிறேன். ஏனெனில் அதை என்னுடைய கடமையாகப் பார்க்கிறேன்.
இப்போது கூட எனக்குப் பல கடிதங்கள், வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் மக்கள் தங்கள் அடுத்த வேளை உணவுக்கே போராடும் சூழலைப் பார்க்கிறேன். அவர்கள் பணமோ வேறெதுவோ கேட்கவில்லை. அடிப்படை உணவான அரிசியை வழங்குவதன் மூலம் அவர்கள் சமைத்துச் சாப்பிட முடியும். பல முதியவர்களும், குழந்தைகளும் இப்படிக் கஷ்டப்படுவது வேதனையளிக்கிறது. இதை நான் என் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன்.
என் தம்பி எல்வின் ஒரு யோசனையை என்னிடம் கூறினார். ஒரு மனிதனால் எல்லாருக்கும் உதவ முடியாது. வெளியே பலரும் உதவி செய்யக் காத்திருக்கின்றனர். எனவே அவர்களிடமும் உதவி கேட்கலாம் என்று கூறினார். எனக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துள்ளது. தம்பி எல்வினுக்கு நன்றி.
இந்த யோசனையை முதலில் தலைவர் சூப்பர் ஸ்டாரிடம் சொல்லி, அவரால் அரிசி மூட்டைகளை எனக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டேன். இதைக் கேட்டதும் அவர் என்னை ஆசிர்வதித்து, உடனடியாக 100 அரிசி மூட்டைகளை சுதாகர் மூலமாக இன்று காலை அனுப்பி வைத்தார். இந்த உதவியைச் செய்த என் தலைவர் மற்றும் குருவுக்கு நன்றி. நான் எப்போதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
மேலும் கமல், அஜித், விஜய், சூர்யா, இன்னும் அனைத்து நடிகர்கள், அரசியல்வாதிகள், உதவி செய்ய விரும்பும் அனைவரிடமும் வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு சிறிய உதவி கூட கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரும். இதை நாங்கள் பணமாகச் சேகரிக்கவில்லை. யாரேனும் உணவுப் பொருட்களாக அனுப்ப விரும்பினால் நாங்கள் வந்து அதை சேகரித்துப் பாதுகாப்புக் காரணங்களை மனதில் கொண்டு நாங்களே விநியோகமும் செய்கிறோம்.
ஒரு வருடத்துக்கு முன்னால் முதியோர்களுக்காக தாய் என்னும் அமைப்பைத் தொடங்கினேன். இப்போது அதே பெயரில் இந்த உதவிகள் வழங்கப்படும்” என்று தொண்டு நிறுவனத்தின் விலாசத்தைக் குறிப்பிட்டுள்ளார்.