சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். பின்பு தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ், தனது சொந்த பணத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் என வழங்கியுள்ளார்.
சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை இரும்பேடு மேனிலைப்பள்ளியில் கழிப்பறை இன்றி சிரமப்பட்ட மாணவர்களுக்கு ராகவா லாரன்சுடன் இனைந்து பாலா கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் லாரன்சோடு பாலாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய பாலா, “கடந்த சில வருடங்களாகவே கழிவறை இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். புது கழிவறை கட்ட ரூ.15 லட்சம் ஆகும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவன் கொட்டேஷன் கொடுத்தான். என்னிடம் ரூ.5 லட்சம் தான் இருந்தது. உடனே என்னுடைய ரோல் மாடல் ராகவா லாரன்ஸ் அண்ணன் நியாபகம் வந்தது. சொன்னவுடன் இரண்டு செகண்ட் யோசித்தார். புது கழிவறையை ஷீட்டில் பண்ணலாமா காங்கிரீட்டில் பண்ணலாமா என யோசித்தார்” என்றார். பின்பு லாரன்ஸின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பின்பு ராகவா லாரன்ஸ் பேசுகையில், “பாலா சொன்னவுடன் எதுவுமே கேட்கவில்லை. ஏனென்றால், அவன் செய்வது கண்ணு முன்னாடி தெரிகிறது. இந்த வயதில் இது போல உள்ள பசங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அது நம்முடைய கடமை. அதனால் ஷீட் இல்லாமல் காங்கிரீட்டே கட்டுவோம் என முடிவெடுத்தேன். பாலா யார்கிட்டையும் எதுவும் வாங்குவது இல்லை. இனிமேல் பாலா சைக்கிள் கொடுத்தாலோ, பைக் கொடுத்தாலோ அதில் ராகவா லாரன்ஸ் பணம் உள்ளிருக்கும்” என்றார். இருவரும் ரூ.15 லட்சம் பள்ளிக்கு கழிவறை கட்ட நிதியுதவி வழங்கினார்கள்.