உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது.2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அதேபோல இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் இறந்தோர் எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.ஏப்ரல் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
லாக்டவுன் போடப்பட்ட சமயத்திலேயே மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “என்னுடைய நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் வணக்கம்.நான் கடைசியாகப் பகிர்ந்த போஸ்டின்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் பத்து பேர்தான் தமிழகத்தில் இருந்தார்கள் அடுத்த ஒரு வாரத்தில் அது 500 ஆகியுள்ளது.அதைப் பார்க்கும்போது என் இதயம் உடைகிறது.தயவு செய்து வீட்டைவிட்டு யாரும் வெளியே வராதீர்கள்.வெளியே சென்று எதுவும் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றால் சோஷியல் டிஸ்டன்ஸிங்கைப் பின்பற்றுங்கள்.நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.இது என்னுடைய அட்வைஸ் அல்ல வேண்டுகோள்” என்று வருத்தமாகத் தெரிவித்துள்ளார்.