அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், ஆஹா ஓடிடி தளத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தெலுங்கில் பிரபல ஓடிடி தளமாக அறியப்பட்ட ஆஹா தளம், தற்போது தமிழிலும் எண்ட்ரி கொடுத்துள்ளது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆஹா தளத்தின் அறிமுக விழாவில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகை ராதிகா பேசுகையில், "தெலுங்கில் இருந்து வந்து பிஸினஸ் பண்ண ஆஹா கொண்டுவந்துருக்கிறீர்கள் என்று சிலர் சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன். தமிழர்களுக்காக தமிழ் சினிமாவிற்கான நீங்கள் பெரிய முயற்சியை எடுத்துள்ளீர்கள். அந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். ஆஹா ஓடிடி தளத்தை எல்லா மொழிகளுக்கும் கொண்டு செல்ல இருக்குறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எல்லா மொழிகளிலும் வெற்றியடைய வாழ்த்துகள்.
அல்லு அரவிந்த் சாருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. என்னையும் சிரஞ்சீவி சாரையும் வைத்து அவர் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் நான் பாம்புடன் நடிக்க வேண்டும். பாம்பு என்றால் எனக்கு பயம் என்பதால் அந்தக் காட்சியை பற்றி கூறியதும் நான் மறுத்துவிட்டேன். அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ வந்து நடி என்று அல்லு அரவிந்த் சார் கேட்டுக்கொண்டதால் நானும் சரி என சம்மதித்துவிட்டேன். படப்பிடிப்பு தளத்தில் டேக் சொன்னதும் ஆயிரம் பாம்புகளை திறந்துவிட்டனர். அந்தக் கோபத்தில் நான் திட்டிய வார்த்தைகளை பொதுவெளியில் கூற முடியாது. அவர் ஒரு நிமிடம் மட்டும் வாயை மூடி நில் என்றார். நான் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தேன். உடனே என்னை சமாதானம் செய்ய சிரஞ்சீவி வந்தார். அவர் அருகே வந்ததும் அவர் முதுகில் ஏறிக்கொண்டு, என்னை இங்க இருந்து வெளியே கூட்டிட்டு போங்க என்று கத்த ஆரம்பித்துவிட்டேன். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது" எனப் பேசினார்.