தெலுங்கில் வெளியான படத்தை தமிழில் ‘சிவகாமி’ என டப் செய்து, விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இது பழைய அம்மன் படங்களை போன்ற கான்செப்டில் இருக்கும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் ஜே.எம். பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ராதாரவி பேசுகையில், “சிவகாமி படம் மிக அருமையான படம். காட்சிகள் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்துள்ள எனது டப்பிங் குடும்ப நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். இசை வெளியீட்டில் அரசியல் பேசினால் அது வைரலாகி விடுகிறது. எனது வேலையை விட்டுவிட்டு நான் சிஏஏவுக்கு ஆதரவாக பேசப் போகிறேன். நான் வாழும் காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகவே பேசுவேன்.
மோடி, அமித்ஷா பற்றி பேச இங்கு நான் வரவில்லை. அதற்கு வேறு இடம் இருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்துள்ள தேவதானம் கிறிஸ்து, இந்து சாமியை பற்றிய படம், ஜே.எம்.பஷீர் எனும் முஸ்லிம் உதவியில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். மூன்று மதமும் ஒன்று சேரும் படமாக இப்படம் இருக்கிறது. அனைவரும் இப்படத்தை வாழ்த்த வேண்டும். நாம் இந்தியர் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
சிஏஏ வை எதிர்க்க சொல்லி கையெழுத்து வாங்குவதற்கு பதில் இப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம். சிஏஏ பற்றி ஒன்றுமே தெரியாமல் தான் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அவர்களை விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடும். கேவலமாக இருக்கிறது. சிஏஏ வேண்டாம் என இப்போது சொன்னால் எதிர்காலத்தில் இங்கே நமக்கு இடமே இருக்காது. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.
பட்டியல் போடுவது தான் என்ஆர்சி. பட்டியல் போட்டால் தான் நமக்கே நம்மைபற்றி தெரியும். என் வீட்டில் எத்தனை பேர் என எனக்கு தெரிய வேண்டுமல்லவா? நல்லவேளை என் தந்தை காலத்தில் என்ஆர்சி இல்லை. அப்படி கணக்கெடுத்திருந்தால் ஊர் ஊராக அலைந்திருக்க வேண்டும். நம்மை பற்றி தெரிந்துகொள்ள என்ஆர்சி அவசியம். அத்தனை மதங்களும் இணைந்து இந்தியாவை காக்க வேண்டும்” என்றார்.