சென்னை கிண்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திரைப்பிரபலங்களான ராதாரவி, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ராதாரவி பேசுகையில், ”இந்த விருதை எனக்கு வழங்கியதற்கு நன்றி. மேடையில் நான் ஆங்கிலத்தில் பேசலாம் என்று நினைத்தேன். சீமானை பார்த்த பிறகு ஐயையோ... ஆங்கிலத்தில் பேசிவிடக்கூடாது என நினைத்தேன். இந்த விருது பெறுவதற்காக 350 மைலுக்கு அப்பால் இருந்து வந்துள்ளேன். எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது யாரோ கொடுத்திருக்க வேண்டியது; இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். விருதை எனக்கு காட்டிய உடனேயே ரொம்பவும் பிடித்து விட்டது. அது சகோதரர் சீமானின் சிம்பெல். இந்த விருதை ஜெயபாலன் கைகளில் இருந்து வாங்கியதில் மகிழ்ச்சி. நிறைய பேருக்கு இன்று விருது வழங்கியிருக்கிறார்கள். சின்னத்திரை, வெள்ளித்திரை, விளையாட்டுத்துறை என இங்கிருக்கும் அனைவருமே திறமையானவர்கள். அமைச்சர் கிரிக்கெட் அகாடமியை தொடங்கிவைத்து என் வாழ்நாளில் எங்கும் பார்த்ததேயில்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கக்கூடியது என நினைக்கிறேன்.
கடைசியாக இங்கிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அறிவுரையைக் கூற விரும்புகிறேன், உங்கள் தாய், தந்தையை கடைசிவரை பார்த்துக்கொள்ளுங்கள். தயவு செய்து முதியோர் இல்லத்தில் விட்டுவிடாதீர்கள்” எனக் கூறினார்.