Skip to main content

விஜயகாந்திற்காக கடவுளின் மீது கோபம்; ரஜினிக்கு அப்புறம் விஜய் தான் - ராதாரவி பளிச் பதில்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Radharavi interview about tamil cinema heroes

 

சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ராதாரவி

 

என் தந்தை எம்.ஆர்.ராதா எப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உள்வாங்கி அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன். பிறவிக் கலைஞன் அவர். நாடகம் மூலமாக நடிகராக அவர் மாறினாலும் எலக்ட்ரிக் வேலைகள் உட்பட பல விஷயங்கள் அவருக்குத் தெரியும். பெரியாரை சந்திப்பதற்கு முன்பே புரட்சிகரமான சிந்தனைகள் அவருக்குள் தோன்றின. இப்போது நடக்கும் விஷயங்களை அப்போதே அவர் சொல்லியிருக்கிறார். படிப்பறிவும் இல்லாமல் எப்படி இவை அனைத்தையும் சாதித்தார் என்பது எனக்கு இன்றும் ஆச்சரியம்.

 

'பிசாசு' படத்தில் நான் செய்த கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த கிரியேட்டிவிட்டி தான் நான் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. விஜயகாந்த் சார் மாதிரி ஒரு நல்ல மனிதரைப் பார்க்க முடியாது. எப்போதும் தர்மம் செய்துகொண்டே இருப்பார். கடவுள் பக்தி அதிகமுள்ள எனக்குக் கடவுள் மேல் கோபம் வருவதற்கு விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்கவே மாட்டார். அவருடைய மனைவி அவரை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்.

 

கமல் சாருடன் ஏன் நான் அதிகம் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க வேண்டும். அதேபோல் அஜீத்துடன் சில படங்கள்தான் நடித்திருக்கிறேன். அதன் பிறகு ஏன் அவர் என்னைக் கூப்பிடவில்லை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். 5000-க்கும் அதிகமான ஆபரேஷன்களுக்கு அஜீத் சார் நிதியுதவி செய்திருக்கிறார். அவர் மீதான மரியாதை எனக்கு அதிகரித்ததற்கு அதுதான் காரணம். 

 

ஆரம்பத்தில் நான் பார்த்த விஜய்க்கும் சர்க்கார் படத்தில் நான் பார்த்த விஜய்க்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. 'நாளைய தீர்ப்பு' படத்தின்போது அவர் அவ்வளவு பயப்படுவார். பலமுறை நான் அவரைத் தேற்றியிருக்கிறேன். அதன் பிறகு அவர் அடைந்த வளர்ச்சி பெரிய அளவில் இருக்கிறது. "எம்ஜிஆரை சுட்ட நிகழ்வு நிகழ்ந்த அன்று மாலை உங்கள் வீட்டின் நிலை எப்படி இருந்தது?" என்று ஒருமுறை என்னிடம் தனியாகக் கேட்டார். நான் பிரமித்துப் போனேன். அவருடைய உழைப்பால் தான் ரஜினி சாருக்கு அடுத்தது விஜய் தான் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்