Skip to main content

“சங்கத்தின் சந்தர்ப்பவாத கோரிக்கைகள் எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகின்றன” -க்யூப் அறிக்கை!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

theatre

 

 

தமிழ் சினிமா துறையில் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே வி.பி.எஃப். கட்டணம் குறித்தான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டபின்புதான் திரையரங்கில் புது படங்கள் வெளியாகும் என்று முன்பே பாரதிராஜா அறிவித்திருந்தார்.

 

அப்போதும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று பாரதிராஜா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “தற்போது வி.பி.எஃப் சம்பந்தமாக அனைத்துத் தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புதுப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

 

மேலும், சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த காலகட்டத்தை கருத்தில்கொண்டு ஒரு வருட காலத்திற்கு தற்காலிகத் தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன்வைத்தோம்.

 

எனினும் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்ததில் நல்ல தீர்வு ஏற்படும் வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காட்டமாக க்யூப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஏற்கனவே 2018-ல் இந்தப் பிரச்சனை வந்து, விபிஎஃப் கட்டணங்கள் 20 சதவீதம் குறைக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இப்போதும் டிஜிட்டல் சேவை தருபவர்கள் விபிஎஃப் கட்டணங்களை வெகுவாக குறைத்துள்ளனர். ஆனால், சமரசம் ஏற்படவில்லை.

 

இப்போது கரோனா நெருக்கடியை மனதில் வைத்து முதலில் 50 சதவீதம் என்று குறைக்கப்பட்ட கட்டணம் தயாரிப்பாளர் சங்கத்தின் அழுத்தத்தால் 60 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால், இப்போது ஒட்டுமொத்தமாக அந்த கட்டணமே கூடாது என்கிறார்கள்.

 

திரையரங்குகளுடன் நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டு, பல நூறு கோடிகளை இந்த டிஜிட்டல் சேவையில் க்யூப் முதலீடு செய்துள்ளது. உலகில் செயல்பட்டு வரும் நான்கு டிசிஐ டிஜிட்டல் சினிமா சர்வர் உற்பத்தியாளர்களில் க்யூப் நிறுவனமும் ஒன்று. இது தேசத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமையான ஒரு விஷயம்.

 

தீபாவளிக்குப் புதிய திரைப்படங்கள் வெளியாகும் வழக்கம் தொடர வேண்டும் என்றுதான் மத்திய, மாநில அரசுகள் திரையரங்குகளைத் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு திரையரங்குகள் மற்றும் டிஜிட்டல் சேவை தருபவர்கள் மீது காட்டப்படும் நெறிமுறையற்ற செயல் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு இழைக்கும் அநியாயமும் ஆகும்.

 

படத்தை வெளியிடத் தயாராக இருந்த தயாரிப்பாளர்கள் சிலரும் அழுத்தம் கொடுக்கப்பட்டுப் புறக்கணிக்க வைக்கப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்.

 

துறையை, சினிமா ரசிகர்களை இது எவ்வளவு பெரிதாகப் பாதிக்கும் என்பதைப் பரிசீலிக்காமல், முன்னெப்போதும் இல்லாத இந்தக் கடின காலத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எவ்வளவு சலுகைகளைப் பெற முடியுமோ அவ்வளவு சலுகைகளைப் பெற தயாரிப்பாளர் சங்கம் முயன்று வருகிறது.

 

திரையரங்க அனுபவம் என்பதற்கு மாற்றே கிடையாது. ரசிகர்களின் திருப்திதான் எங்கள் லட்சியம். ஏற்கனவே முடிந்த அளவு சமரசம் செய்துகொண்டோம். திரையரங்குகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் தராமல், தயாரிப்பாளர்கள் இதை ஏற்பதே முக்கியமாகும்.

 

திரைத்துறை பிழைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் சந்தர்ப்பவாத கோரிக்கைகள் எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகின்றன” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்