'அலா வைகுந்தபுரமலோ’ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்திலும் த்ரிவிக்ரம் இயக்கத்திலும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். இந்நிலையில் பேன் இந்தியா படமாக உருவாகும் 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் பேசியபோது... "நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று வளர்ந்து நின்றிருப்பதால், 'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டால்தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம். சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால் இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தனர். ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து புஷ்பா விவரிக்கிறது. சுமார் 270 கோடி ரூபாயில் உருவாகும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.