மத்திய அரசு கடந்த ஜூன் 19ஆம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை வெளியிட்டது. அந்த மசோதா வெளியானது முதலே இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரைக்கலைஞர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். குறிப்பாக சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தை தேவைப்பட்டால் மத்திய அரசு மீண்டும் தணிக்கை செய்ய முடியும் எனும் புதிய விதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், தயாரிப்பாளர் டி. சிவா ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேச விரோத கருத்துகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம். வேறு எந்தக் காரணத்திற்காகவும் தணிக்கை செய்த பிறகு அதைத் தடை செய்யும் உரிமை யாருக்கும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு சட்டம் வந்தால் பணம் போட்ட தயாரிப்பாளர்களின் நிலை எந்த நேரத்திலும் கேள்விக்குறியாகிவிடும். இது கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, மொத்த முதலீடும் போட்டு படத்தை வெளியிட்டபின் அந்தப் படம் தடை செய்யப்பட்டால் தயாரிப்பாளரின் நிலைமை என்ன ஆவது. எனவே புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.