சூர்யா ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிட்தி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், "சூர்யா ஃபிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் என்றவுடன் எனக்கு ஏ.எம்.ரத்னம் அவர்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஷங்கரை வைத்து, படமெடுத்து சம்பாதித்து அதே பணத்தை சினிமாவிலேயே விட்டுவிட்டு அதை அடைக்க தெலுங்கில் போய் படமெடுத்து கொண்டிருக்கிறார். சூர்யா ஃபிலிம் புரொடக்சன்ஸ் நல்ல பெயர். இந்தக் கடின காலத்திலும் தமிழில் படத்தை கொண்டு வரும் தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. மலையாள சினிமாவில் சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். இப்போது நான் மலையாளப்படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்றுதான் கேட்கிறேன். கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள். இங்கே யார் உதவி செய்கிறார்கள்.
கரோனா காலத்தில் ரஜினி சார் போன் செய்து என்ன உதவி வேண்டும் எனக்கேட்டு 1000 மூட்டை அரிசி கொடுத்தார். ராம் சரண் படம் தோற்ற போது நான் ஹீரோ என்பதால்தான் படம் வாங்கினார்கள் எனத் தயாரிப்பாளருக்கு 15 கோடியை திருப்பிக் கொடுத்தார். ராதே ஷ்யாம் படம் பெயிலர் ஆனவுடன் பிரபாஸ் அந்த படத்திற்கு வாங்கிய பணத்தில் 50 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். அந்தத் தயாரிப்பாளர் எவ்வளவோ மறுத்தும் பிரபாஸ் அந்தப் பணத்தைக் கொடுத்து விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யச் சொன்னார். ராம் சரண், பிரபாஸை வணங்குகிறேன். படம் வெற்றிபெற்றால் உடனே சம்பளத்தை அதிகரிக்கிறார்கள். தோல்வியடைந்தால் சம்பளத்தைக் குறைப்பதில்லை. வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டுமா இல்லையா? இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்" எனப் பேசினார்.;