கரோனா அச்சுறுத்தலால், இந்தியாவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாதம் 15ஆம் தேதிதான் சில தளர்வுகளுடன் திரையரங்குகளை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனாலும், அந்தந்த மாநில அரசுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. திரைப்பட உரிமையாளர் சங்கங்கள் 50 சதவீத பார்வையாளர்களைக் கொண்டு திரையரங்குகளை இயக்குவது லாபத்தைத் தராது என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, கரோனா அச்சுறுத்தலால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் படங்களை ஓ.டி.டியில் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். இதனால், சின்ன பட்ஜெட் படங்கள் சரியான விலைக்கு விற்காமல், கம்மியான விலைக்கு விற்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைச் சூசகமாக தயாரிப்பளர் தனஞ்செயன் ட்விட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், “உங்கள் படங்களில் ‘ஹாட் ஸ்டார்ஸ்’ இல்லையெனில் அவற்றை ஓ.டி.டி தளங்களுக்கு விற்பது எளிதல்ல. ஒரே வழி என்னவென்றால் அவற்றை ‘நெட்’ விலையை விடக் குறைவான விலையில் விற்பது அல்லது வருவாய்ப் பங்கீடு அடிப்படையில் விற்பது. ‘அமேசிங்’காக இருக்கிறது இல்லையா? சிறிய நடிகர்களைக் கொண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற ஒரு ‘ஜீ’ பூம்பா தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.