இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக எந்தப்படத்திலும் வடிவேலு நடிக்காமல் இருந்தார். தமிழ் சினிமாவிற்கு வடிவேலு ரீ எண்ட்ரி கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்தும்வருகின்றனர்.
இந்த நிலையில், 'டிடெக்ட்டிவ் நேசமணி' என்ற படத்தின் மூலம் வடிவேலு ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என போஸ்டர் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்படத்தில், 'டிடெக்ட்டிவ் நேசமணி' படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்க, ராம் பாலா இயக்க இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பொய் செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா… ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார்.