கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்கும்படியும் படஅதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், பார்க்கிங் கட்டணம், கேண்டீன் உணவு பொருள் விலையை குறைக்க வேண்டும் என்பதை குறித்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும், படஅதிபர்களுக்கும் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து விட்ட நிலையில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களை இன்று நேரடியாக சந்தித்து பேச தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்..."தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக வரும் 17ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த அவசர பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்து ஸ்ட்ரைக் வாபஸ் ஆகவேண்டும் என்று திரையுலகினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Published on 12/04/2018 | Edited on 13/04/2018