ஜூன் 1-ஆம் தேதி வழக்கமாக கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற்றமடைந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. 'நிசர்கா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் இன்று மும்பை குஜராத் இடையே கரையைக் கடக்கவுள்ளது. 1891ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பையில் வீசவுள்ள இந்தப் புயலால் மஹாராஷ்ட்ராவில் பதட்டம் நிலவி வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் அடிக்கும் சமயத்தில் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா 'நிசர்கா' புயல் குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
"இந்த ஆண்டு இடைவிடாமல் பிரச்சனைகளை உணர வைக்கிறது. தயவுசெய்து எல்லோரும் பாதுகாப்பிற்கான வழியை உறுதிசெய்து, முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகளோடு, கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். 'நிசர்கா' புயல், எனது அம்மா, சகோதரர் உட்பட 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் எனது அன்புக்குரிய சொந்த நகரமான மும்பையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இப்படி ஒரு கடுமையான சூறாவளி நிலச்சரிவை அனுபவிக்கவில்லை. உலகம் மிகவும் அவநம்பிக்கையாக இருக்கும் இந்த நேரத்தில், இது கண்டிப்பாக பேரழிவை ஏற்படுத்தும்'' எனப் பதிவிட்டுள்ளார்.