'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.
இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அதில் ப்ருத்வி பாண்டியராஜன் பேசுகையில், “இப்படி ஒரு வெற்றிக்காகத்தான் நான் 18 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருந்தேன்… எல்லோரும் என்னை பாண்டியராஜனின் பையன் என்று சொல்லும் போது ஆரம்பத்தில் சந்தோசமாக இருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன்… ஆனால் இன்று ப்ளூ ஸ்டார் படத்தைப் பார்த்துவிட்டு, எல்லோரும் என்னை என் பெயரைக் கூட சொல்லிக் கூப்பிடாமல் என் கதாபாத்திரத்தின் பெயரான சாம், சாம் என்று சொல்லிக் கூப்பிடும் போது மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்த வெற்றியை எனக்குக் கொடுத்த இயக்குநர் ஜெயக்குமாருக்கும் என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் லெமன் லீஃப் புரொடக்ஷன்ஸ் கணேசமூர்த்தி மற்றும் சவுந்தர்யாவுக்கும் நன்றிகள்.
அசோக்செல்வன் ஒரு தன்னலமற்ற கதாநாயகன். தான் மட்டும் ஸ்கோர் செய்தால் போதும் என்று நினைக்காமல் தன்னோடு சேர்ந்து நடிப்பவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நடிகர், எனக்குத் தெரிந்து அசோக் மட்டும் தான். ஆரம்பத்தில் இருந்தே என்னிடம், ‘இப்படம் கண்டிப்பாக உனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும், அவசரப்படாமல் பொறுமையாக இரு..’ என்று கூறினான். அவனுக்கு மீண்டும் நன்றி. இப்படத்தில் நான் இன்று இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என் நண்பன் சாந்தனு தான். அவன் தான் இப்படத்தின் ஆடிஸன் போய்க் கொண்டிருப்பதை என்னிடம் தெரிவித்தான். அவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று பேசினார்.